Sunday, August 19, 2012

பெரியாரின் பெண்விடுதலைச் சிந்தனைகள்




தமிழ்த்திருநாடு சான்றோர் பலரை நாட்டிற்கு வழங்கி அணி செய்திருக்கிறது. மொழிக்காக வாழ்ந்தவர் பலர். நாட்டின் விடுதலைக்காக வீழ்ந்தவர் பலர். மண்டிக் கிடந்த மூடக்கருத்துகளைச் சிதைத்தவர் சிலரே. அவருள் தமிழ்நாடு தவம் செய்து பெற்றவர் ஒருவருண்டென்றால், அவர்தாம் பெரியார்.

தொண்டு  செய்து  பழுத்த  பழம்
      தூயதாடி  மார்பில்  விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
      மனக்குகையில் சிறுத்தை எழும்.

                              இப்பாடல் வரிகள் பெரியாரைப் பற்றிய பாவேந்தரின் படப்பிடிப்பு.

பழந்தமிழ்ச்சமுதாயத்தில் பெண்கள் நன்மதிப்புப் பெற்றிருந்தார்கள்; புலவராய், பாடினியாய், விறலியாய்த் திகழ்ந்து மாண்புடை மன்னரால் மதிக்கப் பெற்றார்கள். கல்வி நலம் பெற்ற பெண்பாற் புலவர்க்கு மன்னரும் பணிந்தனர். மறக்கொண்ட மன்னனின் பகையை மாற்றத் தூது சென்ற பெருமையையும் அக்காலத்துப் பெண்கள் பெற்றிருந்தார்கள். அக்காலச் சூழல் பிற்காலத்தே மாறியது. வந்தவர் கூறிய கருத்தையெல்லாம் இங்கு வாழ்ந்தவர் ஏற்றனர்; பெண்களை அடிமைப்படுத்தினர்; வீட்டிற்குள் முடக்கி வைத்தனர். எனவே, நாட்டு விடுதலைக்குப் போராடிய பெரியார், பெண்களின் சமூக விடுதலைக்கும் போராடினார்.

பெரியாரின் பெண்விடுதலைச் சிந்தனைகள் இரண்டு வகை. ஒன்று, அடிப்படைத் தேவைகள்; பிறிதொன்று, அகற்றப்படவேண்டியவை. பெண்கல்வி, பெண்ணுரிமை, சொத்துரிமை, அரசுப்பணி ஆகியன  அடிப்படைத் தேவைகள். குழந்தைத் திருமணம், மணக்கொடை, கைம்மை வாழ்வு ஆகியன அகற்றப்படவேண்டியனவை.

பெண்கல்வி:
பெண்கல்வி முன்னேற்றத்திற்குப் பெருந்தடை, வீட்டில் அவர்களை முடக்கி வைத்ததே. இது நாட்டு நடப்பை ட்அறியவிடாமல்  அவர்களின் அறிவை மறைக்கச் செய்வதாகும். `நமது சமுதாயத்தில் பெண்கள் சார்ந்த தலைகீழான ஒரு புரட்சி ஏற்பட்டாலொழிய, பெரிய மாறுதல்களைக் கொண்டு வரவியலாது. அப்படி மாறுதல்கள் ஏற்பட்டாலும் அதனால் பயனொன்றும். பெண்கள் மனிதப் பிறவிகளாக நடமாட வேண்டுமானால், முதலில் அடுப்பங்கரையை விட்டு அவர்களை வெளியேற்றவேண்டும். பெண்கள் கல்வி பெறுவது அவர்கள் உரிமை மட்டுமன்று; சமூக மாற்றத்திற்கு மிக இன்றியமையாததும் ஆகும். பெண்கள் கல்வி கற்றாலொழிய சமூக மாற்றங்கள் ஏற்படாது’ என்று பெரியார் உறுதியாக எடுத்துரைத்தார்.

"ஆண்கள் பெண்களை படிக்க வைக்க வேண்டும். அவர்களுக்கு உலகப் படிப்பும், ஆராய்ச்சிப் படிப்பும் தாராளமாய்க் கொடுக்கவேண்டும். நாட்டிலுள்ள கேடுகளில் எல்லாம் பெருங்கேடு பெண்களைப் பகுத்தறிவற்ற சீவன்களாய் வைத்திருக்கும் கொடுமை; இவ்விழிநிலை ஒழிக்கப்பட வேண்டும்" என்றார் பெரியார்.

பெண்ணுரிமை:
பெண்கள் உரிமை பெற்றுப் புது உலகைப் படைக்கவேண்டும் என்று விரும்பியவர் பெரியார். அதற்காக அவர், அவர்களை ஆயத்தப்படுத்தும் முறையே தனியானது. ` ஆணுக்கு பெண் இளைப்பில்லை’ என்று சிந்தித்தவர் பெரியார். ` பெண்கள் தத்தம் கணவனுக்கு மட்டுமே உழைக்கும் அடிமையாக இராமல், மனிதசமுதாயத்திற்குத் தொண்டாற்றும் புகழ் பெற்ற பெண்மணிகளாக விளக்கவேண்டும்’ என்று வலியுறுத்தினார்,

சொத்துரிமை:
பெரியார் பெண்ணுரிமை மறுப்புக்கான காரணங்களை நன்கு ஆராய்ந்தார். பெண்களுக்கு வழிவழிவரும் சொத்துரிமை மறுக்கப்பட்டமையே அவர்களின் அடிமை வாழ்வுக்கு அடிகோலியது என்று உணர்ந்தார். அதற்காக, அவர்கள் போராடவும் கிளர்ச்சி செய்யவும் வேண்டுமெனக் கூறினார்.

``பெண்களுக்குச் சொத்துரிமை கொடுத்துவிட்டால், அவர்களுக்கு இருக்கும் எல்லாவகையான அடிமைத்தனங்களும் ஒழிந்துபோகும்.பெண்ணடிமை என்பதற்குள்ள காரணங்கள் பலவற்றில் சொத்துரிமை இல்லாதது என்பதே முதன்மையான காரணம். ஆதலால், பெண்கள் தாராளமாகவும் துணிவுடனும் முன்வந்து சொத்துரிமைக்குக் கிளர்ச்சி செய்யவேண்டியது மிகவும் இன்றியமையாத உடனடிச் செயலாகும்’’ என்று பெரியார், தம் கட்டுரைகளில் எழுதியும்  மேடைகளில் பேசியும் வந்தார். இன்று  அச்சிந்தனை நடைமுறைக்கு வந்ததுள்ளது.

அரசுப்பணி:
அனைத்துத் துறைகளிலும் ஆண்களைப்போலவே பெண்களும் அரசுப்பணியைப் பெறவேண்டும். அரசாங்கத்தின் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பணியாற்றம்போது, நம் சமுதாயத்தில் புரட்சி ஏற்படும். `` பெண்களுக்கு எல்லா வகையான உத்தியோகமும், கிடைக்கச் செய்ய வேண்டுமென்று வற்புறுத்திக் கூறுகிறோம்’’ என்று, பெரியார் அன்று சிந்தித்ததனைத் தமிழக அரசு இன்று நடைமுறைப்படுத்தி வருகின்றது.

அகற்றப்பட வேண்டியவை:
சடங்குகளையும் மூடநம்பிக்கைகளையும் களைவதில் உறுதியான உள்ளம் படைத்தவராக இருந்தார் பெரியார். பெண்ணுரிமைக்கு ஊறுவிளைவிக்கும் பழைய நம்பிக்கைகளை ஏற்க மறுத்தார். விடுதலைக்கு முன்னிருந்த பெருங்கொடுமைகளுள் குழந்தை மணமும் ஒன்று. ஆளும் அறிவும் வளர்வதற்கு முன்பாக வாழ்க்கைப் பயணமா ? இது, சிற்றில் சிதைத்து விளையாடும் பருவத்தில் பெற்றோர் செய்த வேதனை விளையாட்டு எனக்கூறி அதனை நீக்கப் பாடுபட்டார்.

மணக்கொடை மறுப்பும் கைம்மை ஒழிப்பும்:
 தமிழர்களிடம் இன்று பரவியுள்ள பெருநோய் ஒன்று உண்டு. அதுவே மணக்கொடை. பெற்றோர் பலர், தம் மகனின் கல்விக்காகப் பணம், செலவழிப்பதனைத் தங்கள் கடமையைச் சேர்ந்தது எனக் கருதாது, அதை ஏதோ ஒரு தொழிலில் போட்ட முதலீடாகவே கருதுகின்றனர்.

அந்த முதலீட்டை வட்டியுடன் சேர்த்தே, அவனுக்கு வரப்போகின்ற மனைவிமூலம்  மணக்கொடையாய்ப் பெற்றுவிடவேண்டுமென்று துடிக்கின்றனர்.  சமுதாயத்தில் முறையான ஒழுக்கமும் அன்புமும்  தியாக உணர்ச்சியும் ஏற்பட்டால்தான், இம்மாதிரியான தீமைகளை ஒழிக்க இயலும். தமிழ்நாட்டு இளைஞர்கள், மாணவர்கள், பட்டதாரிகள் ஆகியோர் செக்குமாடுகளாக இல்லாமல், பந்தயக்குதிரைகளாக மாறவேண்டும். "தாமே பாடுபட்டு உழைத்து முன்னேறவேண்டும் என்னும் உயர்ந்த எண்ணம், நம் இளைஞர்களிடையே வளரவேண்டும்" என்று பெரியார் நார்ப்பறை ஆர்த்தார். கணவனை இழந்தோர் மறுமணம் செய்துகொள்வதில் தீங்கில்லை என்றும் தெரிவித்தார்.

ஒழுக்கம்:
` ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்’ என்னும் வள்ளுவர் வாய்மொழியை நன்குணர்ந்தவர் பெரியார். ஒரு நாடு வளத்துடன் இருக்கவேண்டுமானால், அந்நாட்டு மக்கள் அனைவரும் ஒத்த ஒழுக்கமுடையவர்களாக இருக்கவேண்டும். ஒழுக்கமென்பதும் கற்பென்பதும் பெண்களுக்கு மட்டும் என்றில்லாமல் ஆண், பெண் இருபாலர்க்கும் பொதுவாகும் என்பது, அவர்தம் கருத்து.

பெரியார், சமூக முரண்களை எதிர்த்தவர்; மூடக்கருத்துகளை முட்டறுத்தவர்; தொலைநோக்குப் பார்வையுடையவர்; பகுத்தறிவுக்குப் பொருந்தாதவற்றை அறுத்து எறிந்தவர்; சமூகமாற்றத்தை விரும்பியவர்; பெண்களே சமூகத்தின் கண்கள் எனக் கருதியவர்; பெண்களை அடிமைத்தளையிலிருந்து மீட்டவர். பெரியார் வழிகாட்டுதலால், தமிழகம் இன்று தலைநிமிர்ந்து நிற்கிறது.

(நன்றி: பத்தாம் வகுப்பு, தமிழ் உரைநடைப்பகுதி, 2012 சமச்சீர்கல்வி பாடத்திட்டம்)

****************************
தட்டச்சு செய்து உதவியர் : மானமிகு கு.நீலகண்டன் தி.க., மாணவரணி, பேராவூரணி-சேதுபாவாசத்திரம் 
****************************

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களை வரவேற்கிறேன்.... அறிவு நாணயத்தோடு கேள்விகளும், கருத்துக்களும் இருக்கவேண்டும்.